×

மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே ஆற்று மணலை அள்ளி டெம்போவில் கடத்த முயன்ற கும்பல் போலீசை கண்டதும் தப்பி ஓட்டம்

குலசேகரம்: மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே ஆற்றில் மணல் அள்ளி டெம்போவில் கடத்த முயன்ற கும்பல் போலீசாரை கண்டதும் ஓட்டம்பிடித்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் பரளியாறு அங்கிருந்து பெருஞ்சாணி, மலவிளை திருவட்டார் வழியாக பாய்ந்து மூவாற்றுமுகம் பகுதியில் கோதையாற்றுடன் இணைந்து குழித்துறையில் தாமிரபரணியுடன் கலக்கிறது. மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மலையில் இருந்து அடித்து வரப்படும் மணல் குவியல் பரளியாற்றில் தேங்கிவிடுகிறது.

இதற்காகவே மழைக்காலங்களில் மணல் திருட்டு கும்பல்கள் ஆற்று படுகைகளையே சுற்றி சுற்றி வருகின்றனர். பகல் நேரங்களில் தேங்கி கிடக்கும் மணல் குவியலை அப்படியே சாக்கு மூடைகளில் கட்டிவிட்டு புதருக்குள் மறைத்து வைத்து விடுவார்கள். இரவு நேரங்களில் டெம்போ உள்ளிட்ட வாகனங்களை கொண்டு வந்து நைசாக மணல் சாக்குமூடைகளை ஏற்றிவிட்டு கடத்தி சென்று காசு பார்த்துவிடுகிறார்கள்.மணல் திருட்டு சம்பவம் அடிக்கடி நடந்து வரும் பகுதிகளில் போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதியில் நேற்று இரவு சிலர் டெம்போக்களில் மணல் கடத்துவதாக திருவட்டார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் டெம்போவில் மணல் மூடைகளை ஏற்றிக்கொண்டிருந்த கும்பல் நாலாபுறமும் சிதறி ஓடி தப்பித்தனர். போலீசார் அங்கு அனாதையாக நின்று கொண்டிருந்த டெம்போ மற்றும் மணல் மூடைகளை பறிமுதல் செய்து திருவட்டார் காவல் நிலையத்துக்கு கொண்டுவந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே ஆற்று மணலை அள்ளி டெம்போவில் கடத்த முயன்ற கும்பல் போலீசை கண்டதும் தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Mathur tank bridge ,Kulasekaram ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!